சத்தியமங்கலம் அருகே கால்நடைகளை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது: 2 வயது ஆண் சிறுத்தை சாவு
சத்தியமங்கலம் அருகே கால்நடைகளை அடித்து கொன்ற பெண் சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது, வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொல்வது தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே பெரியகுளம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பெண் சிறுத்தை ஒன்று விவசாய தோட்டங்களில் நடமாடுவதோடு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொன்றது. கடந்த வாரம் குப்புசாமி என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்த பெண் சிறுத்தை, ஆடு ஒன்றை அடித்து இழுத்துச் செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்ட கேமராவில் பதிவானது. இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் கூண்டு வைத்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள பெருமாள் என்பவரது தோட்டத்தில் வைக்கப்பட்ட கூண்டில் பெண் சிறுத்தை சிக்கியது. இதைப்பார்த்த அப்பகுதி விவசாயிகள், உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கூண்டில் சிக்கிய பெண் சிறுத்தையை மீட்டனர். பின்னர், வனத்துறை கால்நடை மருத்துவரை வரவழைத்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி தெங்குமரஹடா வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் காப்புக்காட்டில், அனுபாவி சுப்ரமணியம் கோவிலுக்கு மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் ரேஞ்சர் தலமையிலான வனக்குழு ரோந்து பணியில் இருந்தது. அப்போது, வனப்பகுதியில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலை அடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, ஆண் சிறுத்தை உடலில் பல காயங்களுடன் இறந்து கிடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று மாவட்ட வன அலுவலர், உதவி வனப் பாதுகாவலர் மற்றும் வன ஆர்வலர்களின் முன்னிலையில் ஆனைகட்டி அரசு கால்நடை மருத்துவர் டாக்டர் பிரபாகர், வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் ஆகியோர் சிறுத்தை உடலை பரிசோதனை செய்தனர். பின்னர், வனப்பகுதியில் சிறுத்தையின் உடல் எரிக்கப்பட்டது. இந்த சிறுத்தை மற்றொரு சிறுத்தையுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக இறந்து இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.