பள்ளிக்கல்வித் துறையைக் காட்டிலும் ஒரு மட்டமான துறை தமிழ் நாட்டில் இருக்கிறதா?
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு இல்லை என்ற அமைச்சரது அறிவிப்பின் மைகூட இன்னும் காயவில்லை.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் “பொதுத்தேர்வு நடத்துங்கள்” என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் நேற்று ( 03-03-20) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கின்றார்.
யாரை ஏமாற்ற இந்த நாடகத்தைப் பள்ளிக் கல்வித்துறை நடத்துகிறது?
அமைச்சர் அறிவிப்பினைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பும் தைரியம் அதிகாரிகளுக்கு எப்படி வந்தது?
கல்வி அமைச்சர் பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிக்கொண்டிருக்கிறாரா?
“நான் அறிவிப்பது போல அறிவித்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்; நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நமது டெல்லி எஜமானர்கள் சொன்னதை மட்டும் நிறைவேற்றுங்கள்” என ரகசிய உத்தரவைப் பிறப்பித்துவிட்டு, நாட்டு மக்களை எல்லாம் முட்டாளாக்கி விடலாம் என்ற நினைப்பில் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறாரா?
கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவிற்கு வந்து தானே ஆகவேண்டும். முகத்திரை கிழிந்து தொங்கும் போது பிஞ்சுக் குழந்தைகளை வதைக்கும் இந்தக் கோர முகங்கள் வெளியே தெரியாது என்று நினைக்கிறார்களா?
இந்த லட்சணத்தில் ஏதோ இந்தியாவே திரும்பிப் பார்க்கின்றது என்ற தம்பட்டம் வேறு😡
வெட்கக்கேடு!
முன்னாள் கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு